துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் ஷின்சோ அபேவுக்கு மாரடைப்பு; அதிகளவு இரத்தம் இழப்பு - மருத்துவர் தகவல்
|ஷின்சோ அபேவைக் கொன்ற தோட்டா அவரது இதயம் மற்றும் முக்கிய தமனியை சேதப்படுத்தியது. சம்பவ இடத்தில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
டோக்கியோ,
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
67 வயதான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, இன்று காலை நாரா என்ற பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, யமகாமி என்பவரால் சுடப்பட்டார்.
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினரான 41 வயதான அந்த நபர், வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணத்திற்கான காரணங்களை பற்றி நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசரகால மருத்துவ சேவை பிரிவின் தலைவர் ஹைட்டடா புகுஷிமா கூறியிருப்பதாவது:-
ஷின்சோ அபேவைக் கொன்ற தோட்டா அவரது இதயம் மற்றும் முக்கிய தமனியை சேதப்படுத்தியது. சம்பவ இடத்தில் வைத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அவருடைய கழுத்தின் முன் பகுதியில் தோட்டா துளைத்துள்ளது. இரண்டு முறை சுட்டதில் இரு காயங்கள் அவரது உடம்பில் உள்ளன.
இது இரத்த இழப்பை ஏற்படுத்தியது. அவர் உடலிலிருந்து ஏராளமாக இரத்தம் வெளியேறிவிட்டதால், ரத்தம் அடைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதனை தொடர்ந்து உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக அவர் காலை 11.30 மணிக்கு சுட்டப்பட்ட உடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.ஷின்சோ அபேவின் உடலை துளைத்த தோட்டா அவரது இதயத்தை தாக்கி இரத்த இழப்பை ஏற்படுத்தியது - மருத்துவர் தகவல்