நியூயார்க்கில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மீது புல்டோசர் ஏற்றி சிதைக்கப்பட்ட சம்பவம் - வைரல் வீடியோ
|நியூயார்க் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மற்றும் பிற வாகனங்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து தூள் தூளாக்கப்பட்டன.
நியூயார்க்,
நியூயார்க் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கிட்டத்தட்ட 100 சட்டவிரோத பைக்குகள் மற்றும் பிற வாகனங்கள் மற்றும் பிற சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் நேற்று புல்டோசர் மூலம் இடித்து தூள் தூளாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை நியூயார்க நகர நிர்வாகம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது.
மேயர் அலுவலகம் தரப்பில் பேஸ்புக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், புரூக்ளினில் உள்ள எரி பேசின் வாகன பார்க்கிங் இடத்தில், புல்டோசரின் அடியில், 92 சட்டவிரோத வாகனங்கள் தூள் தூளாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
மேயர் எரிக் ஆடம்ஸ் இந்த தகர்ப்பு நடவடிக்கையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் உள்ளூர் தெருக்களில் இருந்து அச்சுறுத்தும் வாகனங்களை ஒழிப்பதில் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். சட்டவிரோத வாகனங்களை சாலையில் இருந்து அகற்றுவோம் என்ற மேயரின் வாக்குறுதியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு இதுவரை சுமார் 900 டர்ட் பைக்குகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நியூயார்க்கின் தெருக்களில் உலா வரும் சத்தமான, மிரட்டும் ஆபத்தான மற்றும் சட்டவிரோத பைக்குகளை அகற்றுவதற்கான கடினமான பணியை நாங்கள் முடித்துள்ளோம் என்றார்.
நியூயார்க் நகர நிர்வாகம் பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்களை விற்பனை செய்யவொ அல்லது நன்கொடையாக வழங்குவதை காட்டிலும், அவற்றை அழிப்பதைத் தேர்ந்தெடுத்தது. ஏனெனில் இதுபோன்ற வாகங்கள் தெருவில் இருந்து நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். அவற்றில் பல பைக்குகளுக்கு காப்பீடு இல்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நியூயார்க் தெருக்களில் சட்டவிரோத பைக்குகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அவற்றை பயன்படுத்தி சவாரி செய்வதால் ஏற்படும் கடுமையான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.