அமெரிக்காவில் கொடூரம்: இரவில் சாலையில் பெண்ணை தாக்கி, காருக்கு பின்னால் இழுத்து பலாத்காரம்
|அந்த பெண் கீழே விழுந்ததும் தரதரவென அவரை அந்நபர் இழுத்து, இரண்டு கார்களுக்கு பின்னால் கொண்டு செல்கிறார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட பெருநகர பகுதி பிரான்க்ஸ். 45 வயது பெண் ஒருவர் அந்த வழியே பின்னிரவு 3 மணியளவில் சாலையோரம் நடந்தபடி சென்றார். அப்போது, மர்ம நபர் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றிருக்கிறார்.
வெள்ளை துணியால் முகம் தெரியாதபடி மறைத்து கொண்ட அந்நபர், கையில் இருந்த பெல்ட்டால் அந்த பெண்ணின் கழுத்து பகுதியை சுற்றி திடீரென வீசி, அவரை இழுத்துள்ளார்.
இதில், அந்த பெண் கீழே விழுந்ததும் தரதரவென அவரை அந்நபர் இழுத்து சென்றிருக்கிறார். அதில் இருந்து தப்பிக்க அந்த பெண் முயல்கிறார். ஆனால், பிடியை விடாமல் அந்த நபர் இரண்டு கார்களுக்கு நடுவில் கொண்டு செல்கிறார்.
இதில், ஒரு கட்டத்தில் அந்த பெண் மயக்கமடைந்து விடுகிறார். இதன்பின்னர், அந்த பெண்ணை சுயநினைவில்லாத நிலையிலேயே அந்நபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, தப்பி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர்.
இதன்பின், நியூயார்க் சமூக சுகாதார மற்றும் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், அவர் உடல்நலம் தேறி வருகிறார் என போலீசார் தெரிவித்தனர். அந்நபரின் புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு அவரை தேடி வருகின்றனர்.
அமெரிக்காவில் இரவில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை மர்ம நபர் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.