கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை
|கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பியாங்யாங்,
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. இதற்கிடையே ஜப்பான் கடல் பகுதியிலும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதால் இந்த கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஜப்பானும் இணைந்து கொண்டது.
இதனால் கடந்த வாரம் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன. இதனை போருக்கான தாக்குதல் நடவடிக்கை என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் கூட்டுப்போர்ப்பயிற்சியின்போது கொரிய தீபகற்ப பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட குண்டுகள் வீசும் விமானங்களை அமெரிக்கா பறக்க விட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வடகொரியா இந்த கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்படும் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என வடகொரியாவின் அரசு ஊடகம் அச்சம் தெரிவித்துள்ளது.