< Back
உலக செய்திகள்
குளிக்க மறுத்ததால் பெண் கொலை... கொலையாளிக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கோர்ட்டு

கோப்புப்படம்

உலக செய்திகள்

குளிக்க மறுத்ததால் பெண் கொலை... கொலையாளிக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கோர்ட்டு

தினத்தந்தி
|
14 July 2024 11:16 AM IST

2 பெண்களை கொடூரமாக கொலை செய்த கொலையாளிக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் (வயது 52). கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவருடைய செல்போனை பெண் ஒருவர் திருடினார். ஆனால் ஸ்டீவன் ஸ்மித் இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இதனிடையே செல்போனை திருடிய பெண் அதில் இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்டு அதிர்ந்து போனார். அதில் ஒரு வீடியோவில் ஸ்டீவன் ஸ்மித் ஒரு பெண்ணை சித்ரவதை செய்து, கொடூரமாக கொலை செய்த காட்சிகள் இருந்தன. அதுமட்டும் இன்றி கொலை செய்வதற்கு முன்பு அந்த பெண்ணை அவர் பாலியல் ரீதியில் துன்புறுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்களும் செல்போனில் இருந்தன.

இதையடுத்து, அந்த பெண் ஸ்டீவன் ஸ்மித்திடம் இருந்து திருடிய செல்போனை போலீசிடம் ஒப்படைத்து அதில் உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் குறித்து கூறினார். கொலை தொடர்பான வீடியோக்களை போலீசார் ஆய்வு செய்ததில் செல்போன் திருடுபோவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் ஸ்டீவன் ஸ்மித் இந்த கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்டீவன் ஸ்மித்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அலஸ்காவை சேர்ந்த கேத்லீன் ஹென்றி என்ற பெண்ணை கடத்தி ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே கடந்த 2018-ல் வெரோனிகா அபூச்சுக் (52) என்ற பெண்ணை கொலை செய்ததாக கூறி போலீசாரை அதிரவைத்தார்.

இதுப்பற்றி அவர் போலீசாரிடம் கூறுகையில், "வீடு இல்லாமல் வீதியில் தங்கியிருந்த வெரோனிகாவை மது மற்றும் உணவு கொடுப்பதாக கூறி எனது வீட்டுக்கு அழைத்து சென்றேன். பின்னர் அவரை குளிக்கச் சொன்னேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். அதனால், கோபமுற்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டேன்" என்றார்.

ஸ்டீவன் ஸ்மித்தின் இந்த பரபரப்பு வாக்கு மூலம் அலாஸ்கா மட்டும் இன்றி அமெரிக்கா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக வீடு இல்லாமல் வீதிகளில் வசிக்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதுடன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டங்களை முன்னெடுத்தனர். பல தரப்பினரும் இந்த போராட்த்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதே போல் ஸ்டீவன் ஸ்மித்தால் கடத்தி கொலை செய்யப்பட்ட கேத்லீன் ஹென்றியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அவருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தினர். இதனிடையே, ஸ்டீவன் ஸ்மித் மீது இரட்டை கொலை, பாலியல் தொல்லை, ஆதரங்களை அழித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித்தை குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித்துக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இரட்டை கொலை வழக்கில் அவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த கேத்லீன் ஹென்றி மற்றும் வெரோனிகா அபூச்சுக்கின் குடும்பத்தினர் கண்ணீர் சிந்தியபடி ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்