< Back
உலக செய்திகள்
ஜாமீனில் வெளியே வந்த 5-வது நாளில் முன்னாள் காதலியை அடித்துக் கொன்ற காதலன்
உலக செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த 5-வது நாளில் முன்னாள் காதலியை அடித்துக் கொன்ற காதலன்

தினத்தந்தி
|
12 July 2024 11:54 PM IST

அமெரிக்காவில் ஜாமீனில் வெளியே வந்த 5-வது நாளில் முன்னாள் காதலியை அடித்துக் கொன்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன் ஜோகன்சென்(22). நர்சிங் மாணவியான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது காதலன் பிரைசன் ரிவர்ஸ்(23) என்பவருடன் நாஷ்வில் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆனால் அங்கு பிரைசன் ரிவர்ஸ் தனது காதலி லாரனை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரைசன் ரிவர்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரைசன் ரிவர்சுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

பிரைசன் ரிவர்ஸ் வெளியே வந்தால் தனது மகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என லாரன் ஜோகன்செனின் தந்தை கோர்ட்டில் முறையிட்டார். இருப்பினும் நீதிபதி ஜாமீன் வழங்கியதையடுத்து பிரைசன் ரிவர்ஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், பிரைசன் ஜாமீனில் வெளியே வந்த 5-வது நாளில், அவரது முன்னாள் காதலி லாரன் ஜோகன்சென் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் மிசிசிபி மாகாணத்தில் உள்ள ஒரு மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது முகம் முழுவதும் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், தலையில் சில துளைகள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், லாரனின் முன்னாள் காதலன் பிரைசனை கைது செய்துள்ளனர். அவர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயிரிழந்த பெண்ணின் தந்தை கூறுகையில், "நீதித்துறை எனது மகளையும், எனது குடும்பத்தையும் கைவிட்டுவிட்டது. எனது மகள் மிகப்பெரிய கனவுகளோடும், நம்பிக்கையோடும் இருந்தாள்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்