< Back
உலக செய்திகள்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? பரபரப்பான சூழலில் ரிஷி சுனக்கிற்கு முன்னாள் உள்துறை செயலாளர் பிரிதி படேல் ஆதரவு!
உலக செய்திகள்

இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார்? பரபரப்பான சூழலில் ரிஷி சுனக்கிற்கு முன்னாள் உள்துறை செயலாளர் பிரிதி படேல் ஆதரவு!

தினத்தந்தி
|
24 Oct 2022 1:02 PM GMT

இன்னும் சில மணி நேரத்தில் ரிஷி சுனக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால், கடந்த 20-ந்தேதி லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்த போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரியான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர். நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் (வயது 49) போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார்.

எனினும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை.

இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார். இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் பென்னி மார்டண்ட்டிற்கு ஆதரவு கிடைப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது. இதனால், ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆவது ஏறத்தாழ உறுதி என்றே சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்தின் முன்னாள் உள்துறை செயலாளர் பிரிதி படேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிதி படேல் கடந்த மாதம் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றதை தொடர்ந்து பதவி விலகினார். அவர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.

இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்து இன்று பிரிதி படேல் கூறியதாவது, "நமது நாட்டிற்கு இந்த கடினமான காலங்களில், நாம் பொது சேவைக்கு முதலிடம் கொடுத்து ஒன்றுபட வேண்டும், நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

நம் நாட்டின் மீது நமக்கு அக்கறை உள்ளது. பெரிய சவால்கள் நம் மீது உள்ளன. இந்த நிலையில், புதிய தலைவராக ரிஷி சுனக்கை வெற்றிபெற செய்ய, சிறந்த வாய்ப்பை வழங்க நாம் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும்" என்று டுவிட்டரில் தெரிவித்தார்.

முன்னதாக, அவர் பதிவிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, "தீபாவளி ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. சுய சிந்தனை, குடும்பம், நண்பர்கள் மற்றும் பிறருக்கு சேவை செய்வதற்கான நேரம் இது. அனைவருக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் செய்திகள்