எல்லை பிரச்சனை: இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் - சீனா அறிவிப்பு
|இருதரப்பு உறவுகள் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை காண இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்து உள்ளது.
பீஜிங்,
லடாக் மோதல்
லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டில் சீன ராணுவம் அத்துமீறியதில் இரு தரப்பிலும் பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு நாட்டு படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து அங்கு குவிக்கப்பட்ட படைகளை விலக்குவது தொடர்பாகவும், அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் அத்துமீறல்
இந்த விவகாரம் அடங்குவதற்குள் அருணாசல பிரதேசத்தில் இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் அந்த நாடு வாலாட்டியது. அங்குள்ள தவாங் செக்டரில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.
இந்த மோதலிலும் இரு தரப்பிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இது சர்வதேச அரங்கில் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த சம்பவங்களால் இந்திய-சீன உறவுகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. லடாக்கில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
வெளியுறவு மந்திரி
இவ்வாறு இந்தியா-சீனா உறவுகளில் சலசலப்பு நீடித்து வரும் நிலையில், இரு தரப்பு உறவுகளின் உறுதியான வளர்ச்சிக்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என சீனா அறிவித்து உள்ளது.
'2022-ல் சர்வதேச நிலவரம் மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள்' என்ற தலைப்பில் பீஜிங்கில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அந்த நாட்டு வெளியுறவு மந்திரி வாங் யி, இதை அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இரு தரப்பின் உறுதிப்பாடு
இந்தியாவும், சீனாவும் ராணுவம் மற்றும் தூதரகங்கள் வழியாக தொடர்பை வைத்திருக்கின்றன. எல்லைப்பகுதிகளில் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் இரு தரப்பும் உறுதிப்பாட்டுடன் உள்ளன.
சீனா-இந்தியா உறவுகளின் நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு வாங் யி தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் விரிவான உரை நிகழ்த்திய வாங் யி, பல்வேறு நாடுகளுடனான சீனாவின் உறவுகள் குறித்து பேசினார். குறிப்பாக பாகிஸ்தான், தைவான், அமெரிக்கா போன்ற நாடுகளுடனான உறவுகள் குறித்தும் அவர் விவரித்தார்.