இந்தோனேசியா: போலீஸ் நிலையத்திற்கு புகுந்து தற்கொலைப்படை தாக்குதல் - போலீஸ் அதிகாரி பலி
|உடலில் வெடிகுண்டை கட்டிக்கொண்டு பைக்கில் அந்த நபர் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.
ஜகார்தா,
ஆயிரக்கணக்கான தீவுகளை கொண்ட தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் முக்கிய தீவு மாகாணமான ஜாவா தீவி பண்டங்க் என்ற நகரம் உள்ளது. பண்டங்க் நகரில் அஸ்தனா அன்யர் என்ற பகுதியில் போலீஸ் நிலையம் உள்ளது.
இந்நிலையில், இந்த போலீஸ் நிலையத்தில் இன்று இன்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, உடல் முழுவதும் வெடிகுண்டை கட்டிக்கொண்டு ஒரு நபர் பைக்கில் போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்.
அங்கு அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அருகே பைக்கில் சென்ற அந்த நபர் தான் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை தீடிரென வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 6 போலீசார் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய நபரும் உடல் சிதறி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது யார்? ஏதேனும் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.