< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
6 Dec 2022 11:16 PM GMT

ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் அங்கு ஐ.எஸ். கோரசான் பயங்கரவாத அமைப்பின் கை ஓங்கி வருகிறது.

அங்கு ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். குறிப்பாக மசூதிகள் மற்றும் கல்வி நிலையங்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷரிப் நகரில் நேற்று அரசு ஊழியர்களை குறிவைத்து பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

பெட்ரோலிய இயக்குனரகத்தின் ஊழியர்கள் பலர் பஸ்சில் தங்களின் அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் பாதையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனம் ஒன்றை நிறுத்தி வைத்திருந்தனர்.

அந்த வாகனம் இருந்த பகுதிக்கு பஸ் வந்தபோது பயங்கரவாதிகள் அதில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

அதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது. குண்டு வெடிப்பில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் உள்பட பல வாகனங்கள் தீக்கிரையாகின. மேலும் அந்த பகுதியில் இருந்த பல கடைகள் சின்னபின்னமாகின.

இந்த பயங்கர குண்டு வெடிப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. முன்னதாக கடந்த மாத இறுதியில் மசார்-இ-ஷரிப் நகரில் உள்ள ஒரு மதப்பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலியானதும், 24 பேர் படுகாயம் அடைந்ததும் நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்