பாகிஸ்தானில் காவல்துறை வாகனம் மீது குண்டு வீசி தாக்குதல் - 5 பேர் உயிரிழப்பு
|போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இஸ்லாமபாத்,
பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்கு கடும் குளிர் நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதனிடையே தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இன்று காலை ரோந்து பணிக்கு சென்ற காவல்துறை வாகனத்தின் மீது மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் 5 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கோஹ்லு மாவட்டத்தில் நடந்த தாக்குதலில், பொதுத்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் சகோதரர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.