< Back
உலக செய்திகள்
பொதுமக்கள்  சிகிச்சை பெறும் காசா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; பிரதமர் மோடி அதிர்ச்சி
உலக செய்திகள்

பொதுமக்கள் சிகிச்சை பெறும் காசா மருத்துவமனையில் குண்டுவெடிப்பு; பிரதமர் மோடி அதிர்ச்சி

தினத்தந்தி
|
18 Oct 2023 3:08 PM IST

பொதுமக்கள் சிகிச்சை பெறும் காசா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.

பணய கைதிகளை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் கப்பல் உள்பட ஆயுத உதவிகளை செய்து வருகின்றன.

இந்த நிலையில், காசாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொதுமக்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

இதில், 300 பேர் வரை உயிரிழந்து உள்ளனர் என காசா ராணுவ தலைவர் அல்-ஜசீரா தொலைக்காட்சியில் பேசும்போது கூறியுள்ளார். ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சுகாதார அதிகாரிகளும் இதனை தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், காசாவில் அல் ஆலி மருத்துவமனையில் மக்கள் உயிரிழந்த சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எங்களுடைய மனதிலிருந்து இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்தனைகளையும் செய்து கொள்கிறோம்.

நடந்து வரும் இந்த மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது என்பது ஒரு தீவிரத்திற்குரிய மற்றும் தொடர்ந்து வரும் வருத்தத்திற்குரிய விசயம். இவற்றுடன் தொடர்புடையவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்