< Back
உலக செய்திகள்
காணாமல் போன பெண்ணின் உடல் மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருந்து மீட்பு
உலக செய்திகள்

காணாமல் போன பெண்ணின் உடல் மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருந்து மீட்பு

தினத்தந்தி
|
27 Oct 2022 3:49 PM IST

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணின் உடல் 7 மீட்டர் நீள முள்ள மலைப்பாம்பு வயிற்றுக்குள் கண்டெடுக்கப்பட்டது.

ஜாம்பி

இந்தோனேசியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த 52 வயதான ஜஹ்ரா என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்.

இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்கு தேடி சென்றனர். விடிய விடிய தேடியும் ஜஹ்ரா கிடைக்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் ரப்பர் தோட்டத்திற்கு அருகே 16 அடி நீளம் கொண்ட ஒரு மலைப்பாம்பு நகர முடியாமல் கிடந்தது. அந்த பாம்பின் வயிறு மிகவும் வீங்கிய நிலையில் காணப்பட்டது.

இதைப்பார்த்த ஜஹ்ராவின் உறவினர்கள் ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு கொன்று விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். இதைத்தொடர்ந்து அந்த மலைப்பாம்பை அடித்துக்கொன்று பாம்பின் வயிற்றை கிழித்தனர்.

அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தோட்டத்திற்குள் வேலைபார்த்துக் கொண்டிருந்த போது ஜஹ்ராவை அந்த மலைப்பாம்பு இறுக்கி கொன்று உடலை விழுங்கி இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் இந்தோனேசியாவில் நடப்பது முதல்முறையல்ல. ஏற்கனவே 2018-ம் ஆண்டு 54 வயதான பெண்ணை இதே போன்று ஒரு மலைப்பாம்பு கொன்று விழுங்கி இருந்தது.

மேலும் செய்திகள்