அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பலி
|அமெரிக்காவில் ஏரியில் மூழ்கி 2 இந்திய மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த ஆர்யன் வைத்யா (வயது 20), சித்தாந்த் ஷா (19) ஆகிய 2 மாணவர்கள் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 15-ந் தேதி நண்பர்களுடன் சேர்ந்து இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள மன்ரோ ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் படகு சவாரி சென்றனர். பின்னர் அவர்கள் படகை ஏரியின் நடுப்பகுதியில் நிறுத்திவிட்டு ஏரியில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்தனர்.
அப்போது ஆர்யன் மற்றும் சித்தாந்த் திடீரென நீரில் மூழ்கினர். உடனடிருந்த நண்பர்கள் அவர்கள் இருவரையும் காப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆர்யன் மற்றும் சித்தாந்த் மாயமாகினர். இதனையடுத்து நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் இண்டியானா போலீசார் நீச்சல் வீரர்களின் உதவியுடன் மாயமான ஆர்யன் மற்றும் சித்தாந்த்தை தேடும் பணியில் இறங்கினர். ஆனால் அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்தததால் மீட்பு பணிகள் சவாலாகின. எனினும் மீட்பு குழுவினர் அவர்களை தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஏரியில் மூழ்கி மாயமான ஆர்யன் மற்றும் சித்தாந்த் பிணமாக மீட்கப்பட்டனர். அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 2 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.