< Back
உலக செய்திகள்
நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
உலக செய்திகள்

நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
18 Jan 2023 5:56 AM IST

நேபாள விமான விபத்தில் பலியானோர் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.

காத்மாண்டு,

விமான விபத்து

நேபாள நாட்டில் காத்மாண்டு நகரில் இருந்து பொகாராவுக்கு கடந்த 15-ந் தேதி சென்ற யெட்டி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தரை இறங்க முயற்சித்தது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையேயுள்ள சேதி ஆற்றின் கரை மீது அந்த விமானம் மோதி தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 72 பேரும் கூண்டோடு பலியாகி விட்டனர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அவர்களில் 4 பேர், உத்தரபிரதேச மாநிலம், காசிப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு ஜெய்ஸ்வால் (வயது 35), அபிஷேக் குஷ்வாகா (25), விஷால் சர்மா (22), அனில்குமார் ராஜ்பர் (27) ஆவார்கள்.

இந்த விபத்தில் பலியான 5-வது இந்தியர் பீகாரின் சீதாமர்ஹியைச் சேர்ந்த 26 வயதான சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆவார். கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுதான் என சொல்லப்படுகிறது.

உடல்கள் மீட்பு, ஒப்படைப்பு

விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. பலியானவர்களில் 70 பேரது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 2 பேரது உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

70 உடல்கள் மீட்கப்பட்டதில் 22 பேரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன என யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் சுதர்சன் பர்தவுலா தெரிவித்தார்.

எஞ்சிய 40 உடல்களில் 25 உடல்கள் ஏற்கனவே ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் காத்மாண்டு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து திரிபுவன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மீதம் உள்ள 23 உடல்களும் காத்மாண்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்தியர்கள் குடும்பத்தினர்

இந்த விபத்தில் பலியான 5 இந்தியர்களில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரது உடல்களைப் பெறுவதற்காக அவர்களது குடும்பத்தினர் காசிப்பூரில் இருந்து காத்மாண்டு விரைந்தனர். அனேகமாக அவர்கள் இன்று உடல்களுடன் காசிப்பூர் வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் மீட்கப்பட்டன. அவை, நேபாள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த கருப்பு பெட்டிகள் மூலம்தான் விபத்தின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன என்பதை வெளிசத்துக்கு வரும்.

மேலும் செய்திகள்