< Back
உலக செய்திகள்
10 லட்சம் பாலோயர் கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக்கா...? குழப்பத்தில் ஊடகவாசிகள்
உலக செய்திகள்

10 லட்சம் பாலோயர் கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக்கா...? குழப்பத்தில் ஊடகவாசிகள்

தினத்தந்தி
|
23 April 2023 4:53 PM IST

சுஷ்மா சுவராஜ், நடிகர்கள் சுஷாந்த் சிங், இர்பான் உள்ளிட்ட மறைந்த பிரபலங்களின் கணக்குகளுக்கு கூட புளூ டிக் வசதி மீண்டும் கிடைத்து உள்ளது.

நியூயார்க்,

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் தன்வசப்படுத்தினார். மஸ்க், டுவிட்டர் உரிமையாளரான பின்பு, தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.

இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிபடுத்தி கொள்ள ஏதுவாக, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் சரி என குறிக்கும் வகையில் நீலநிற டிக் (புளூ டிக்) குறியீடு இருக்கும்.

இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருந்த இந்த திட்டம் பின்னர் தள்ளி போனது.

இந்த சூழலில், டுவிட்டரில் புளூ டிக்கை பெறுவதற்கு ஏற்ற வகையில் சந்தா தொகையை அந்நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ முறையில் அறிமுகம் செய்தது.

இதுவரை குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கட்டணம் செலுத்தி டுவிட்டரில் சந்தாதாரர்களாக ஆவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்திய பயனாளர்களும் ஒரு மாதத்திற்கு ரூ.900 கட்டணம் செலுத்தி உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.

இதன்படி, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்களை கொண்ட சந்தாதாரர்களுக்கு புளூ டிக் அடையாளம் அவரது முகப்பு பக்கத்தில் கிடைக்க பெறும்.

இதற்கு முன்பு டுவிட்டர் பயனாளர்கள் இதனை பெறுவதற்கு தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆனால், கட்டணம் செலுத்தி, ஆய்வு செய்த மொபைல் போன் எண்ணுக்கு தற்போது தானாகவே புளூ டிக் கிடைக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த டுவிட்டர் கணக்கு அங்கீகாரம் பெற்றது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

இந்த புளூ டிக் முகப்பு பக்கம் பெற்ற பயனாளர்களுக்கு, கூடுதல் அம்சங்களாக சில வாக்குறுதிகளை டுவிட்டர் நிறுவனம் அளிக்கின்றது. குறைவான விளம்பரங்கள் (50% அளவு), நீண்ட பதிவுகள், அதிக நேரம் கொண்ட வீடியோக்கள், வரவிருக்கிற புதிய அம்சங்களை விரைவாக பெற்று கொள்வது ஆகியவை உறுதியளிக்கப்படுகின்றன.

வீடியோக்கள் முழு அளவில் எச்.டி. துல்லியத்துடன் பகிர முடியும். பதிவை வெளியிட்ட 30 நிமிடங்களில் 5 முறை எடிட் செய்யும் வசதியும் புளூ டிக் பயனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பயனாளர் ரத்து செய்யும்வரை, விதிகளுக்கு உட்பட்டு தானாகவே சேவையை புதுப்பித்து கொள்ளும் வசதியும் கொண்டது.

இதேபோன்று, ஸ்பாம் உள்ளிட்ட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் டுவிட் பதிவுகளில், இந்த பயனாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதன்படி ஏப்ரல் 20-ந்தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று டுவிட்டர் எலான் மஸ்க் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியது.

அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட கணக்குகளின் புளூ டிக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சிலம்பரசன், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஷாருக்கான் உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இயக்குனர்கள் சங்கர், செல்வராகவன், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நடிகைகள் சமந்தா, கீர்த்தி சுரேஷ் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரின் கணக்குகளின் புளூ டிக்கும் நீக்கப்பட்டுள்ளன.

சந்தா கட்டியவர்களின் கணக்குளின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை. தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கணக்குகளில் புளூ டிக்குகள் உள்ளன. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்டோரின் புளூ டிக்குகள் நீக்கப்படவில்லை.

இந்த நிலையில், டுவிட்டரின் கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகாத சிலருக்கு விதிவிலக்குகளை எலான் மஸ்க் அளித்திருப்பது போன்று சில விசயங்கள் நடந்து உள்ளன. இதன்படி, 10 லட்சத்திற்கும் கூடுதலான பாலோயர்களை கொண்ட பயனாளர்களுக்கு புளூ டிக் திரும்ப கிடைத்து உள்ளது என கூறப்படுகிறது.

ஆனால் அவர்களது கணக்குகள், புளூ டிக்குக்கு பணம் செலுத்தியதற்கான நடைமுறை சரிபார்க்கப்பட்டு விட்டது என்று காட்டப்படுகிறது. பாலிவுட் நடிகர், நடிகைகளான ஷாருக் கான், ஆலியா பட், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, எம்.எஸ். தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கோடீசுவரர் பில்கேட்ஸ் உள்ளிட்டோரும் இழந்த புளூ டிக்கை மீண்டும் பெற்று உள்ளனர். ஆனால், அவர்கள் பணம் செலுத்தி விட்டனரா? என்று தெளிவாக தெரிய வரவில்லை.

இதேபோன்று, மறைந்த முன்னாள் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத், இர்பான் மற்றும் ரிஷி கபூர், பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன், கூடைப்பந்து வீரர் கோப் பிரையண்ட், கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உள்ளிட்ட பலரது கணக்கிற்கும் புளூ டிக் கிடைத்து உள்ளது மக்களால் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இதில், குறிப்பிடத்தக்க விசயம் என்னவெனில், 65 லட்சம் பாலோயர்களை கொண்ட டுவிட்டரின் இணை நிறுவனரான ஜாக் டோர்சிக்கு இன்னும் புளூ டிக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், டுவிட்டரில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்