வரும் வெள்ளியன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி..!!
|காசாவின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
வாஷிங்டன்,
நாளுக்கு நாள் இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வரும் நிலையில் காசாவில் மனிதாபிமான சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் காசா வீதிகளில் உலாவுவது காண்போரின் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது. உலக நாடுகள் வழங்கும் மனிதாபிமான உதவிகள் எகிப்தின் ரபா எல்லை வழியாக லாரிகளில் காசாவுக்கு அனுப்பப்பட்டு வருகிறபோதும், பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்க அவை போதுமானதாக இல்லை என உதவி அமைப்புகள் கூறுகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள உதவி மையங்களுக்குள் மக்கள் கூட்டம் கூட்டமாக புகுந்து உணவு மற்றும் நிவாரண பொருட்களை எடுத்து சென்றது அங்கு நிலவும் மோசமான சூழலை உணர்த்துவதாக அமைந்தது. இப்படி காசாவின் நிலைமை நாளுக்கு நாள் கவலைக்குரியதாக மாறி வருகிறபோதும் போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனிடையே காசாவில் போர் தீவிரமடைந்து வரும் அதே வேளையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையேயான மோதல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நேற்று மேற்குகரை பகுதியின் ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அவர்களுக்கும், அங்கிருந்த பாலஸ்தீன வாலிபர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீன வாலிபர்கள் 4 பேர் பலியாகினர்.
இதனிடையே வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலிய தரைப்படைகள் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பில், துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து போரிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வரும் வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றும், அங்குள்ள அரசாங்க உறுப்பினர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.