லட்சக்கணக்கானோருக்கு 'கிரீன் கார்டு' வழங்க மசோதா; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
|அமெரிக்க நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கானோருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம், 'கிரீன் கார்டு' என அழைக்கப்படுகிறது. இந்த 'கிரீன் கார்டு' அமெரிக்காவில் வசிக்கிற வெளிநாட்டவர்க்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. ஆனால் சமீப காலமாக இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்காவின் 'எச்-1பி' விசா மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்போர் 'கிரீன் கார்டு' பெற ஏதுவான சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் அலெக்ஸ் பாடில்லா, எலிசபெத் வாரன், பென் ரே லுஜான், கொறடா டிக் டர்பின் ஆகியோர் நேற்று முன்தினம் கொண்டு வந்தனர்.
இதுபற்றி அலெக்ஸ் பாடில்லா கூறும்போது, "காலாவதியாகிப்போன நமது குடியேற்ற அமைப்பு, எண்ணற்ற மக்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது, அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. எங்கள் மசோதா, 35 ஆண்டுகளில் முதல்முறையாக பதிவேடு கட்-ஆப் தேதியை புதுப்பிக்கும். இதனால், அதிகமான அளவில் புலம் பெயர்ந்தோர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்தார். மேலும், "இந்த மசோதா லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்லாண்டு காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து, வேலை செய்து, பங்களிப்பு செய்கிறவர்கள் நிச்சயம்ற எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ வழிபிறக்கும" என்றும் குறிப்பிட்டார்.
இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் ஜோ லோப்கிரென் என்ற எம்.பி.யால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ந்து குறைந்தது 7 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவை அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு 'கிரீன் கார்டு' வழங்கப்படாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கும் லட்சோப லட்சம் குடியேறிகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே அமெரிக்கா விசாவுக்கு இந்தியர்கள் 833 நாட்களும், சீனர்கள் 2 நாட்களும் காத்திருக்க வேண்டியதிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.