'ரஷியா போருக்கு தயாராகுகிறது' அமெரிக்க உளவு தகவலை கேட்க ஜெலன்ஸ்கி விரும்பவில்லை - ஜோ பைடன்
|அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்க விரும்பவில்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
உக்ரைன் மீது ரஷியா 107-வது நாளாக போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தன. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் உளவுத்துறை தகவல்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்க விரும்பவில்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இரண்டாம் உலக போருக்கு பின் இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை. நான் மிகைப்படுத்தி கூறுவதாக நிறைய மக்கள் நினைக்கலாம். உக்ரைன் மீது ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடங்க தயாராகி வருகிறார் என்பதை உறுதி செய்ய எங்களிடம் போதுமான தகவல்கள் இருந்தன. அதில் எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனால், அந்த தகவல்களை கேட்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லை' என்றார்.