< Back
உலக செய்திகள்
அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்
உலக செய்திகள்

அடுத்த சுற்று வாக்கெடுப்பிலும் அமோக ஆதரவு.. நேரடி போட்டிக்கு தயாராகும் ஜோ பைடன்- டிரம்ப்

தினத்தந்தி
|
20 March 2024 3:56 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் கட்சிக்கான முதன்மைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில், கட்சி பிரதிநிதிகளிடையே ஒட்டுமொத்தமாக அதிக செல்வாக்கு பெறும் நபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

ஜனநாயக கட்சியில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். அவருக்கு கட்சியில் பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லை. குடியரசு கட்சியில் டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி நிலவினாலும், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.

கடந்த 5-ம் தேதி நடந்த சூப்பர் செவ்வாய் தேர்தலின்போது, பெருவாரியான மாநிலங்களில் டிரம்ப் வெற்றி பெற்று தனது இருப்பை தக்க வைத்தார். இதேபோல் ஜோ பைடனும் தொடர்ந்து வெற்றி பெற்று முன்னேறினார். இதனால், ஜோ பைடனை எதிர்த்து டிரம்ப் வேட்பாளராக களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியானது.

இந்நிலையில், நேற்று நடந்த தேர்தலில் அரிசோனா, புளோரிடா, இல்லினாய்ஸ், கான்சாஸ், ஒஹியோ ஆகிய மாநிலங்களில் டிரம்ப் எளிதாக வெற்றி பெற்றார். பைடனைப் பொருத்தவரை புளோரிடாவைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்றார். புளோரிடாவில் ஜனநாயகக் கட்சியினர் தங்கள் முதன்மை தேர்தலை ரத்து செய்து, 224 பிரதிநிதிகளையும் பைடனுக்கு வழங்குவதாக தெரிவித்தனர்.

பெருவாரியான பிரதிநிதிகளின் ஆதரவை பெற்றதால், கடந்த தேர்தலைப் போன்றே இந்த தேர்தலிலும் ஜோ பைடன், டிரம்ப் இருவரும் நேரடி போட்டிக்கு தயாராகிவிட்டனர்.

மேலும் செய்திகள்