போருக்கு மத்தியில் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் பயணம்
|இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார்.
வாஷிங்டன்,
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்து வருகிறது. போர் விரிவடையும் பட்சத்தில் எந்த நேரத்திலும் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் தன்னுடைய மிகப்பெரிய போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தியுள்ளது.
அதுமட்டும் இன்றி வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய சரக்கு விமானம் ஒன்றை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டீன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து இஸ்ரேலுக்கு சென்று, அமெரிக்காவின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் இஸ்ரேலை தொடர்ந்து அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றார்.
நேற்று அவர் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்து சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜோ பைடன்
அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஆண்டனி பிளிங்கன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (அதாவது இன்று) இஸ்ரேல் வருவார் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த பயணத்தின்போது இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையையும் அதன் பாதுகாப்பிற்கான நமது இரும்பு கவச உறுதியையும் ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார்" என கூறினார்.
தனது இஸ்ரேல் பயணம் குறித்து ஜோ பைடன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹமாஸ் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்கிறேன். மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், தலைவர்களை சந்திக்கவும் ஜோர்டானுக்கும் செல்கிறேன். எகிப்து - காசா இடையேயான ரபா பகுதியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது" என குறிப்பிட்டுள்ளார்.