இஸ்ரேலில் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ஜோ பைடன்- வெள்ளை மாளிகை முரண்பட்ட கருத்து
|குழந்தைகளின் தலைகளை பயங்கரவாதிகள் வெட்டும் புகைப்படங்களை பார்ப்பேன் என நினைக்கவே இல்லை என்று ஜோ பைடன் கூறினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, முன்னறிவிப்பு இன்றி இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 40 குழந்தைகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ஒரு தீய செயல் என்றும், குழந்தைகளின் தலைகளை பயங்கரவாதிகள் வெட்டும் புகைப்படங்களை பார்ப்பேன் என நினைக்கவே இல்லை என்றும் கூறினார்.
அதன்பின்னர், பைடன் பேச்சு தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம் அளித்தார். பைடன் உண்மையில் அத்தகைய புகைப்படங்களை பார்க்கவில்லை, ஆனால் இஸ்ரேலில் இருந்து வந்த செய்தியை குறிப்பிட்டு பேசினார், என அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக, இஸ்ரேல் நகரங்களில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்களில் அமெரிக்கர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஹமாஸ், பைடனின் கருத்துக்கள் இஸ்ரேலின் குற்றங்களை மூடி மறைக்கும் முயற்சி என கண்டனம் தெரிவித்தது.
இஸ்ரேலில் இருந்து பலரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றுவிட்டனர். அறிவிப்பு எதையும் செய்யாமல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், பிணைக்கைதிகளை கொன்றுவிடுவதாகவும் மிரட்டி உள்ளனர். அந்த பிணைக் கைதிகளில் சில அமெரிக்க குடிமக்களும் இருப்பதாக ஜோ பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.