< Back
உலக செய்திகள்
முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
1 Jun 2024 2:10 PM IST

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 8 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.

வாஷிங்டன்,

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை ஒழிக்கும் நடவடிக்கையிலும் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, காசா முனையில் இஸ்ரேலிய படையினருக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் இடையே சண்டை நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, கத்தார், எகிப்து போன்ற நாடுகள் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்து வருகிறது.

இந்நிலையில், 8 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர புதிய விரிவான திட்டத்தை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளது. இஸ்ரேல் முன்மொழிந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் முன்மொழிந்த திட்டம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறியதாவது, போர் நிறுத்த திட்டம் 3 அடுக்குகளை கொண்டுள்ளது. 6 வாரங்களை கொண்ட முதல் அடுக்கில் முழுமையான போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டு காசா முனையில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்கப்படும். ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்கள் பிடியில் உள்ள பெண்கள், முதியவர்கள், காயமடைந்த பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு மாற்றக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் நூற்றுக்கணக்கானோர் விடுதலை செய்யப்படுவார்கள்.

இந்த கட்டத்தில் தங்கள் பிடியில் உள்ள அமெரிக்க பணய கைதிகளையும் ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். வடக்கு காசா உள்பட காசாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப செல்ல அனுமதிக்கப்படுவார்கள். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்கப்படும். இஸ்ரேல் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளது. போர் நிறுத்தம் வேண்டுமென்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது. போர் நிறுத்தம் வேண்டுமென்றால் இது தான் வாய்ப்பு. ஹமாஸ் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போர் நிறுத்த திட்டத்தின் முதல் அடுக்கை உள்ளடக்கிய 6 வாரங்களில் 2ம் கட்ட அடுக்கு போர் நிறுத்த ஒப்பந்தங்களை இஸ்ரேல் - ஹமாஸ் மேற்கொள்ள வேண்டும். இதில் இரு தரப்பு இடையேயான நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தமும் அடக்கம். முதற்கட்ட அடுக்கில் 6 வாரங்கள் கடந்தும் 2ம் கட்ட அடுக்கிற்கான பேச்சுவார்த்தை நீடித்தாலும் போர் நிறுத்தம் தொடரும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட அடுக்கில் பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உள்பட அனைத்து பணய கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து வெளியேறும். இதில் ஹமாஸ் உறுதியாக இருந்தால் தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக மாறும்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 3ம் கட்ட அடுக்கில் காசாவை மீண்டும் கட்டமைக்க திட்டங்கள் கொண்டுவர அனுமதிக்கப்படும். இந்த கட்டத்தில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தங்கள் பிடியில் உயிரிழந்த பணய கைதிகளின் சடலங்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் முன்மொழிந்து அமெரிக்க அதிபர் அறிவித்துள்ள இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் கத்தார் மூலம் ஹமாஸ் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஆராய்ந்த நிலையில் அந்த அமைப்பும் இஸ்ரேல் முன்மொழிந்துள்ள ஒப்பந்தத்திற்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்