திறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்க பைடன் நிர்வாகம் திட்டம்; அறிக்கை தகவல்
|அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிர்வாகம் திறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்கும் தொடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க அரசு, ஒவ்வோர் ஆண்டும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்குவதற்கான 65 ஆயிரம் விசாக்களை கிடைக்க அனுமதி அளிக்கிறது. இதுதவிர, கூடுதலாக 20 ஆயிரம் விசாக்களை பட்ட மேற்படிப்பு படித்த பணியாளர்களுக்கு அரசு வழங்குகிறது.
2022-ம் நிதியாண்டின்படி, 4.42 லட்சம் எச்-1 பி விசாக்களை வழங்கியதில் 73 சதவீதம் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதில், இரு நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தைகள் ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், திறமையான இந்திய பணியாளர்களுக்கு விசாக்களை எளிமையாக்க அமெரிக்க ஜனாதிபதி பைடன் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி, இந்தியர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கோ அல்லது அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிப்பதற்கு மற்றும் பணியாற்றுவதற்கு உதவும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இதற்கான முடிவை இன்று அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிய அளவிலான இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பணியாளர்கள் எச்-1பி விசாக்களை அமெரிக்காவில் புதுப்பித்து கொள்ள முடியும்.
இதற்காக அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவையிருக்காது. இந்த திட்ட தொடக்கம் வருகிற ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
எனினும், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்றோ அல்லது எந்த வகையான விசாக்கள் என்பது பற்றிய தகவலையோ அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் வெளியிடவில்லை. ஆனால், சிறிய எண்ணிக்கையில் இருந்து, ஓரிரு ஆண்டுகளில் அதிகரிக்க கூடிய நோக்கத்துடன் இந்த திட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.