< Back
உலக செய்திகள்
பூடான் நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி

Image Courtacy: AFP

உலக செய்திகள்

பூடான் நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி

தினத்தந்தி
|
10 Jan 2024 2:56 AM IST

பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

திம்பு,

தெற்கு ஆசியாவின் இளமையான ஜனநாயக நாடாக பூடான் கருதப்படுகிறது. இங்கு கடந்த 2008-ம் ஆண்டு மன்னராட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு ஜனநாயக ஆட்சி அமலுக்கு வந்தது. அதன்படி தற்போது 4-வது நாடாளுமன்ற தேர்தலை பூடான் சந்திக்கிறது.

மொத்தம் 47 தொகுதிகள் கொண்ட பூடான் நாடாளுமன்ற தேர்தலின் முதன்மை சுற்று கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பூடான் டெண்ட்ரல் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 94 வேட்பாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்தநிலையில் இறுதிச்சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது. உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் டிசிரிங் டாப்கேயின் மக்கள் ஜனநாயகம் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழல், மக்கள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், 47 தொகுதிகளில் 30 இடங்களை அக்கட்சி கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பூடான் டெண்ட்ரெல் கட்சி 17 இடங்களை பிடித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்த ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை பூடான் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) வெளியிடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக கொரோனாவுக்கு பின்னர் பூடானில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி, போதிய வேலைவாய்ப்பின்மை, சுற்றுலா, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் அரசு ஆட்டம் கண்டு இருந்தது. இதையே வாக்குறுதிகளாக அறிவித்து மக்கள் ஜனநாயக கட்சி மக்களிடையே பெருவாரியான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்