போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு இடையே... காசாவை தாக்கிய இஸ்ரேல்; 19 பேர் பலி
|இஸ்ரேல் புதிதாக கோரிக்கைகளை வைக்கிறது என கூறி அதற்கு ஹமாஸ் உடன்படாத சூழலில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
காசா,
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர்.
அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களில் ஒரு சிலரை இஸ்ரேல் மீட்டது.
எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
காசா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் இந்த தீவிர மோதலின் ஒரு பகுதியாக, நேற்றிரவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண், 6 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் காசாவுக்கு செல்வார் என கூறப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
வடக்கு நகரில் ஜபாலியா பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மத்திய காசா, கான் யூனிஸ் நகரின் தெற்கே, டெய்ர் அல்-பலா பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.
எனினும், பயங்கரவாதிகளையே குறி வைக்கிறோம் என்றும் பொதுமக்கள் பலியாக காரணம், குடியிருப்பு பகுதிகளில் போராளிகள், ஆயுதங்கள், சுரங்கங்கள் மற்றும் ராக்கெட்டுகளை மறைத்து வைக்க பயன்படுத்தி கொள்கின்றனர் என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறுகிறது.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் தோஹாவில் 2 நாட்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காசாவை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் புதிதாக கோரிக்கைகளை வைக்கிறது என கூறி அதற்கு ஹமாஸ் உடன்படாத சூழலில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்களில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.