உக்ரைன் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய பெலாரஸ்
|உக்ரைன் எல்லையில் இருந்து தொலைவில் அமைந்துள்ள பெலாரஸ் நாட்டின் ஹர்பச்சா நகர வான்பரப்புக்குள் நுழைந்த அந்த ஏவுகணையை பெலாரஸ் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
உக்ரைன் மீது 10 மாதங்களாக போர் தொடுத்து வரும் ரஷியா சமீபகாலமாக உக்ரைனில் ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முன்தினம் தலைநகர் கீவ் உள்பட உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகளை மழையாக பொழிந்தன. அப்போது உக்ரைனின் வான்பாதுகப்பு படை ரஷியா ஏவிய பல ஏவுகணைகளை நடுவழியில் இடைமறித்து அழித்தன. அப்படி ரஷிய ஏவுகணையை அழிப்பதற்காக வீசப்பட்ட எஸ் 300 வான்பாதுகாப்பு ஏவுகணை ஒன்று, எல்லை தாண்டி அண்டை நாடான பெலாரசுக்குள் நுழைந்தது.
உக்ரைன் எல்லையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பெலாரஸ் நாட்டின் ஹர்பச்சா நகர வான்பரப்புக்குள் நுழைந்த அந்த ஏவுகணையை பெலாரஸ் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதை தொடர்ந்து ஏவுகணையின் சிதைவுகள் அங்குள்ள வயல்வெளியில் விழுந்தது. அப்போது அந்த பகுதியில் பயங்கர அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
தங்கள் நாட்டுக்குள் உக்ரைன் ஏவுகணையை வீசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பெலாரஸ் அரசு இது தொடர்பாக உக்ரைன் தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் இதுப்பற்றி உக்ரைன் அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
உக்ரைன் போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.