< Back
உலக செய்திகள்
இந்திய தொழிலதிபரின் முயற்சியால் பிரதமர் ஆனேன்.. - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை

Image Courtesy : ANI 

உலக செய்திகள்

'இந்திய தொழிலதிபரின் முயற்சியால் பிரதமர் ஆனேன்..' - நேபாள பிரதமரின் பேச்சால் சர்ச்சை

தினத்தந்தி
|
6 July 2023 4:03 PM IST

நேபாள பிரதமர் புஷ்ப கமலின் பேச்சுக்கு அந்நாட்டின் எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காத்மாண்டு,

இந்தியாவைச் சேர்ந்த நேபாள தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் நேபாள எதிர்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய பிரதமர் புஷ்ப கமல், "சர்தார் பிரிதம் சிங் என்னை பிரதமர் ஆக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக அவர் பலமுறை டெல்லிக்கு பயணம் செய்ததோடு, காத்மாண்டுவில் பல அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா-நேபாளம் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்" என்று தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சுக்கு நேபாள எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அந்நாட்டின் பிரதான எதிரகட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பி.சர்மா ஒலி கூறுகையில், "பிரதமரின் பேச்சு இந்த நாட்டின் சுதந்திரம், கண்ணியம், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றத்தையே அவமதிக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பான விளக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. உடனடியாக அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்" என்று தெரிவித்தார்.

டெல்லியால் நியமிக்கப்பட்ட நபர் பிரதமர் பதவியில் தொடரக்கூடாது என்று அந்நாட்டு எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் தனது பேச்சுக்கள் தவறான முறையில் உள்நோக்கத்துடன் திரிக்கப்பட்டுள்ளதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்