வங்காளதேச வன்முறை: 400 காவல் நிலையங்கள் சூறையாடல்; 50 போலீசார் பலி
|வங்காளதேசத்தில் வன்முறை பரவியுள்ள நிலையில், நாட்டிலுள்ள பல காவல் நிலையங்களில் போலீசாரே இல்லாத நிலை காணப்படுகிறது.
டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் வன்முறையாக வெடித்தது. இதனை எதிர்த்து, மாணவர்கள் மற்றும் மக்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கடந்த ஜூலையில் 300 பேர் பலியானார்கள். இந்நிலையில், கடந்த 5-ந்தேதி போராட்டம் தீவிரமடைந்தது. இதில், ஹசீனா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த வன்முறையை தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார். எனினும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லம் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. ஹசீனா, சகோதரியுடன் நாட்டில் இருந்து தப்பி சென்றார். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதன்பின்பும், அந்நாட்டில் நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சூழலில், வங்காளதேசத்தில் கடந்த 2 நாட்களில் 400 காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். 50 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் சூழலில், காவலர்கள் பாதுகாப்பை தேடி தஞ்சமடைந்தனர்.
இதனால், நாட்டிலுள்ள பல காவல் நிலையங்களில் போலீசாரே இல்லாத நிலை காணப்படுகிறது. இதற்கு முன்பு ஆட்சி செய்து வந்த, அவாமி லீக் அரசுக்கு நெருங்கிய நிலையில் இருந்த பல மூத்த அதிகாரிகளும் பதுங்கி கொண்டனர் என அந்நாட்டில் இருந்து வெளிவரும் டாக்கா டிரிபியூன் பத்திரிகை தகவல் தெரிவிக்கின்றது.
ஆயுதங்களும், வெடிபொருட்களும் வன்முறை கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பட்டா, ஜாத்ரபாரி, வதரா, அபடோர், மிர்பூர், உத்தரா கிழக்கு, முகமதுப்பூர், ஷா அலி மற்றும் பல்டான் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு உள்ளன.
சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் தங்களுடைய பணியை சுதந்திரத்துடன் செய்ய விடாமல் தடுக்கின்றனர் என போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.