< Back
உலக செய்திகள்
வங்காளதேசம்:  அமெரிக்க அதிபரின் ஆலோசகர் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்
உலக செய்திகள்

வங்காளதேசம்: அமெரிக்க அதிபரின் ஆலோசகர் என கூறி மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்

தினத்தந்தி
|
31 Oct 2023 4:57 PM IST

வங்காளதேசத்தில் அமெரிக்க அதிபரின் ஆலோசகர் என கூறி கொண்டு மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகருக்கு உட்பட்ட பல்தன் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், நபர் ஒருவர் அமெரிக்க அதிபரின் ஆலோசகர் என கூறி கொண்டு மக்களிடம் மோசடியில் ஈடுபடுகிறார் என குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. பொய்யான அடையாளத்துடன் அவர் மக்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவர் டாக்கா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என காவல் துணை ஆய்வாளர் ரகுமான் கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து, டாக்கா மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் அலி ஹைதர் பிறப்பித்த உத்தரவின்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மியான் ஜாகிதுல் இஸ்லாம் என்ற அந்த நபரை டாக்கா விமான நிலையத்தில் வைத்து வங்காளதேச போலீசின் குடியுரிமை துறை அதிகாரிகள் கைது செய்தனர். தோஹா வழியே வாஷிங்டனுக்கு செல்லவிருந்த நிலையில் அவர், கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடந்த விசாரணையில், அவர் ஒரு வங்காளதேச அமெரிக்கர் என தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்டில் வசித்து வருகிறார். வங்காளதேசத்திற்கு அவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

அவர், தன்னை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகர் என கூறியதுடன், வங்காளதேசத்தில் ஒரு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட, எதிர்க்கட்சிகளுக்கு பைடன் உறுதி கூறியுள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார் . எனினும், டாக்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை மறுத்துள்ளது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்