வங்காளதேசத்தில் 6 பேருக்கு மரண தண்டனை
|சுதந்திரப்போரின்போது போர்க்குற்றம் புரிந்ததாக வங்காளதேசத்தில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
டாக்கா,
1971-ம் ஆண்டு நடந்த வங்காளதேச விடுதலைப்போரின்போது, பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பலர் கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர்க்குற்றம், வரலாற்றின் கருப்பு அத்தியாயமாகி இருக்கிறது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் 7 பேர் மீது போர்க்குற்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி முகமது சாகினூர் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது ஜோமாதார், நீதிபதி ஹபிபுல் ஆலம் ஆகியோரைக்கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது.
விசாரணை முடிவில் அஜ்மத் உசேன் ஹவ்லதர், முகமது சகார் அலி சார்தார், முகமது அடியார் ரகுமான் ஷேக், முகமது மொடாசின் பில்லா, முகமது கமால் உதின் கோல்டார், முகமது நஸ்ருல் இஸ்லாம் ஆகிய 6 பேர் மீதான போர்க்குற்ற குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதிகள் அவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்கள். தண்டிக்கப்பட்ட 6 பேரில் முகமது நஸ்ருல் இஸ்லாம் மட்டும் இன்னும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.
ஆரம்பத்தில் இந்த வழக்கில் 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டாலும் விசாரணையின்போது முகமது மொஜாகார் அலி ஷேக் என்பவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.