வங்காளதேசம்: திருமணம் செய்கிறேன் என கூறி கல்லூரி மாணவி பலாத்காரம்; சீன நபர் கைது
|திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி வங்காளதேசத்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த சீன நபர் கைது செய்யப்பட்டார்.
டாக்கா,
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உத்தரா பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி, தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் பேஸ்புக் வழியே ஹீரா சக்மா (வயது 25) என்ற நபரை தொடர்பு கொண்டுள்ளார். இதன்பின்னர், சீனாவுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி மாணவியை உத்தரா நகரில் உள்ள வீடு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னரே, ஜீ ஷெங் (வயது 58) என்பவரின் வீடு அது என தெரிய வந்தது. ஹீராவின் நெருங்கிய கூட்டாளியான ஷெங், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
வீட்டில் இருந்து வெளியேற நினைத்த அந்த மாணவியிடம், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி அமைதிப்படுத்தி உள்ளார். இதன்பின்பு, மாணவியை அடுத்த நாளும் ஜீ ஷெங் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதன்பின்னர், உணவு விடுதி ஒன்றுக்கு மாணவியை ஷெங் அழைத்து சென்றுள்ளார். அப்போது வேறொரு பெண்ணிடம் மாணவி உதவி கேட்டிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.
இதன்பின் போலீசார் உணவு விடுதிக்கு சென்று ஷெங் மற்றும் அவருடைய கூட்டாளியான ஹீரா என இரண்டு பேரையும் பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில், விசயம் உண்மை என தெரிந்தது. சான்றுகளும் கிடைத்தன.
இதனால், 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினருடன் சென்றார். தொடர்ந்து 2 பேரையும் கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர்.