வங்காளதேசத்தில் கோவிலுக்கு சென்ற பக்தர்களின் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
|கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு நேற்று திடீரென கவிழ்ந்ததில் 32 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
டாக்கா,
வங்காளதேசத்தின் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கரடோயா ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு நேற்று மதியம் திடீரென கவிழ்ந்ததில் 24 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்றது. இன்று 7 - 8 பேரின் உடல்கள் மீட்கப்படுள்ளன. இதனையடுத்து படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளதேசத்தின் போடா, பஞ்ச்பீர், மரியா மற்றும் பங்கரி பகுதிகளைச் சேர்ந்த இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய படகில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. அவுலியார் காட் பகுதியில் இந்த விபத்து நடந்தது.
மேலும் 60க்கும் அதிகமானோர் மாயமாகி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அதிகம் என்று போலீசார் கூறினர்.