நடப்பு 2022ம் ஆண்டில் முன்பே பலித்து விட்ட பாபா வாங்காவின் 2 கணிப்புகள்... அடுத்தது என்ன?
|நடப்பு 2022ம் ஆண்டில் பாபா வாங்காவின் 2 கணிப்புகள் முன்பே பலித்து விட்ட நிலையில், அடுத்து நடக்க இருப்பது என்ன என காண்போம்.
லண்டன்,
வடக்கு மாசிடோனியாவில் ஸ்ட்ருமிகா நகரில் கடந்த 1911ம் ஆண்டு பிறந்தவர் பாபா வாங்கா. இவரது இயற்பெயர் வாஞ்ஜெலியா பண்டீவா கஷ்டரோவா. தனது 12 வயதில் கடுமையான சூறாவளி ஒன்றால் இவரது பார்வை பறிபோனது.
ஒரு பெரிய சூறாவளி புயல் இவரை தரையில் இருந்து தூக்கி வீசியது என அவர் அப்போது கூறினார். அதன்பின்னர், நீண்ட தேடுதலுக்கு பின்னர் அவர் கண்டறியப்பட்டார். அப்போது, அச்சம் நிறைந்தவராக காணப்பட்ட அவர் கண்களை மணல் மற்றும் தூசு ஆகியவை படலங்களாக மூடியிருந்தன.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினருக்கு போதிய நிதி வசதியில்லாத சூழலில், வாங்காவுக்கு பார்வை கிடைக்காமல் போனது. ஆனால், வருங்காலம் பற்றிய பார்வை தனக்கு பரிசாக கிடைத்த ஆற்றல் என வாங்கா கூறினார்.
இவர் தனது 85 வயதில் 1996ம் ஆண்டு காலமானார். இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும், நடந்தும் உள்ளன.
இதன்படி, 2016ம் ஆண்டு மிகப்பெரிய இஸ்லாமிய போர் தொடங்கும், ஐரோப்பியர்களுக்கு எதிராக ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்படும். அவர்கள் 2043ம் ஆண்டு ரோமை மைய புள்ளியாக கொண்டு தங்கள் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார்கள் என கூறினார்.
அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் என கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்று கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இதன் பின்னர், 2016ம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலுமை பெறும் எனவும், ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா விலகும் எனவும் கணித்தார். இதனை தொடர்ந்து தன்னுடைய குடிமக்கள் மீது சிரியா நாட்டின் ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார் என கணித்தார், அதுவும் நடந்தது.
இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். 2019ம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் பாபாவை பின்பற்றுவோர் அவரது கணிப்பை நம்புகின்றனர்.
2020ம் ஆண்டு குறித்த அவரது கணிப்புகளில் சில நடந்து உள்ளன.
2020ம் ஆண்டில், வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் ஐரோப்பிய மக்களுக்கும் கெட்ட நேரம்தான். 2020ல் ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடக்கும். மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்கும் திறன் இழந்து மன நலம் பாதிக்கப்படலாம் அல்லது உயிரிழக்கலாம் என்று கூறி இருந்தார். ஐரோப்பா காணாமல் போகும் என்றும் பாபா கூறியிருக்க, பாபா கூறியது பிரெக்ஸிட்டை மனதில் வைத்துதான் என்றும் மக்கள் கருதுகின்றனர்.
அத்துடன் 2020ல் ஐரோப்பாவை தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களுடன் தாக்குவார்கள் என கூறி இருந்தார். 2021ம் ஆண்டு குறித்தும் வருங்காலம் பற்றிய கருத்துகள் பல பலித்து உள்ளன. 2021ம் ஆண்டில் இந்த உலகம் சில பேரழிவுகளை சந்திக்கும் என்றும், அமெரிக்கவின் 45வது அதிபர் (டொனால்ட் டிரம்ப்) மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும் கூறினார். அது பலித்தது.
2022ம் ஆண்டுக்கான அவரது 6 கணிப்புகளில் 2 முன்பே பலித்து விட்டன.
அதன்படி, நடப்பு ஆண்டில் ஆசியாவின் பல நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்பு அடைவார்கள் என கணித்துள்ளார். இதன்படியே சரியாக பலித்துள்ளது.
நடப்பு ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரலுக்கு இடைப்பட்ட காலத்தில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசம் வாய்ந்த பேரிடரில் ஒன்றாக அமைந்தது. தென்கிழக்கு குயின்ஸ்லாந்து, வைடு பே-பர்னட் மற்றும் நியூசவுத் வேல்ஸ், பிரிஸ்பேன் உள்ளிட்ட பகுதிகள் உள்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
வறட்சியால், நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அவர் தெரிவித்து உள்ளார். இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது நடந்து வருகிறது.
கிடைத்துள்ள தகவல்களின்படி, தண்ணீர் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்கும்படி போர்ச்சுகல் அரசு தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. 1950ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது.
இதுவரை, 2022ம் ஆண்டுக்கான அவரது பல்வேறு கணிப்புகளில் 2 சரியாக பலித்திருக்கிறது.
இந்த ஆண்டில் அவர் கணித்துள்ள பிற விசயங்களாக, சைபீரியாவில் ஒரு புதிய கொடிய வைரசானது வெளிவரும். வேற்றுகிரக வாசிகளின் படையெடுப்பு நடைபெறும். வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் கணினியின் கற்பனையான உலக பயன்பாட்டில் மக்கள் அதிகம் மூழ்கி இருப்பார்கள் என தெரிவித்து உள்ளார்.
இவை தவிர, 2023ம் ஆண்டில் பூமியின் சுற்று வட்டபாதையில் மாற்றம் ஏற்படும். 2028ம் ஆண்டில் விண்வெளி வீரர்கள் வெள்ளி கிரகத்திற்கு பயணப்படுவார்கள்.
2046ம் ஆண்டில், உறுப்புமாற்று தொழில்நுட்பம் பயனால், மக்கள் 100 வயதுக்கு கூடுதலாக வாழ்வார்கள் என தெரிவித்து உள்ளார்.
2100ம் ஆண்டில் இரவு மறைந்து போகும் என தெரிவித்திருக்கிறார். பூமியின் மற்றொரு பகுதி, செயற்கை சூரிய ஒளியால் வெளிச்சம் உண்டாக்க செய்யப்படும். இவரது கணிப்பின்படி உலகம் 5079ம் ஆண்டு முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.