ஆஸ்திரேலியாவை இந்த ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும்; மருத்துவ அதிகாரி எச்சரிக்கை
|ஆஸ்திரேலியா நாட்டை 2023-ம் ஆண்டில் பல கொரோனா அலைகள் தாக்கும் என அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கேன்பெர்ரா,
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கண்டங்களை கடந்து கொரோனா பெருந்தொற்று தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா அலை உச்சமடைந்தபோது, தினசரி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகின. எனினும், தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்து உள்ளது.
இதேபோன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் சரிந்தது. கடந்த பிப்ரவரி 7-ந்தேதி வரையிலான வாரத்தில் தினசரி சராசரி தொற்று எண்ணிக்கை 2,403 ஆக பதிவாகி உள்ளது என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியா சுகாதார மந்திரி மார்க் பட்லர், நீண்டகால கொரோனா பற்றிய செனட் விசாரணை குழுவை அமைத்து உள்ளார்.
இதன் முன், அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரியான பால் கெல்லி மற்றும் அவருக்கு முன் அந்த பதவியை வகித்த பிரண்டன் மர்பி (சுகாதார துறை செயலாளராக உள்ளார்) ஆகியோர் நாளை விளக்கமளிக்க உள்ளனர்.
இந்நிலையில், கெல்லி செனட் விசாரணை குழுவின் முன் இன்று கூறும்போது, கடந்த 14 மாதங்களாக எண்ணற்ற அலைகள் நாட்டை பாதிப்பில் ஆழ்த்தி இருந்தன. சமீபத்தில் ஏற்பட்ட அலையின் பாதிப்பானது குறைந்து வரும்போதிலும், மக்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
வருங்காலத்தில் அதிக அலைகள் வர கூடும். இந்த ஆண்டில் குறைந்தது இரண்டு அலைகளாவது வரும் என கணித்துள்ளேன். அதனால், நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களை திரும்பி பார்ப்பது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
அதனால், வரும் காலத்திற்கான பாடங்களை நாம் கற்று கொள்ள முடியும் என நினைக்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் மட்டுமின்றி வேறு நோய்களை பற்றியும் இந்த தருணத்தில் அறிந்து கொள்ள வேண்டும். அதனால், எதிர்காலத்திற்கு ஏற்ப நாம் தயாராக முடியும் என கூறியுள்ளார்.