அண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்.. நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா
|பனி படர்ந்த கண்டமான அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை ஆஸ்திரேலியா வெற்றிகரமாக வெளியேற்றியுள்ளது.
உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும்.
இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் குழுவினர் சென்றனர். இரண்டு ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டன. சுமார் 3000 கி.மீ பயணித்த இந்த குழுவினர் ஆராய்ச்சி மையத்தை இன்று நெருங்கினர். ஹெலிகாப்டர்கள் மூலம் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆராய்ச்சியாளரை மீட்டு கப்பலுக்கு கொண்டு வந்தனர். இந்த கப்பல் அடுத்த வாரம் ஹோபார்ட் துறைமுகத்துக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆராய்ச்சியாளருக்கு டாஸ்மேனியாவில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் குறைந்த அளவிலான மருத்துவ வசதிகளே உள்ளன. கடும் குளிர் நிலவும் காலங்களில் 20 பேர் மட்டுமே தங்கியிருப்பார்கள்.
தற்போது கடுமையான குளிர்காலம் என்பதால் அங்கிருந்து விமானம் மூலம் ஆராய்ச்சியாளர்களை வெளியேற்றுவது சாத்தியமில்லை. கேசி ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் வில்கின்ஸ் ஏரோட்ரோம் என்ற விமான தளம் உள்ளது. இங்குள்ள பனி ஓடுபாதையை கடுமையான குளிர்காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்த முடியாது. ஓடுபாதையை பயன்படுத்தும் அளவிற்கு தயார் செய்ய பல வாரங்கள் ஆகும். எனவே, ஐஸ் பிரேக்கர் கப்பலை அனுப்புவதன் மூலம் மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ள முடிகிறது.