< Back
உலக செய்திகள்
உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவி - ஆஸ்திரேலியா அறிவிப்பு

Image Courtesy : AFP

உலக செய்திகள்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ உதவி - ஆஸ்திரேலியா அறிவிப்பு

தினத்தந்தி
|
28 April 2024 2:45 PM IST

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

கீவ்,

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது.

மிகப்பெரிய படைபலத்தை கொண்ட ரஷியா, ஓரிரு நாட்களில் உக்ரைனை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவ மற்றும் நிதியுதவிகளை வாரி வழங்கி வருகின்றன. இதன் காரணமாக போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்த பிறகும் உக்ரைன் ராணுவம் ரஷியாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லெஸ் உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனின் லிவிவ் நகருக்கு சென்ற அவர், உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷமிஹாலை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிச்சர்டு மார்லெஸ், ஆஸ்திரேலிய அரசு சார்பில் உக்ரைனுக்கு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோன், வெடிமருந்து உள்பட மொத்தம் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவித் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் உக்ரைனுடன் ஆஸ்திரேலியா உறுதியாக துணை நிற்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்