< Back
உலக செய்திகள்
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்; பெண் எம்.பி.க்கு இரவில் நடந்த கொடூரம்
உலக செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்; பெண் எம்.பி.க்கு இரவில் நடந்த கொடூரம்

தினத்தந்தி
|
6 May 2024 5:59 AM IST

ஆஸ்திரேலியா நாட்டின் வீட்டு வசதி துறை மந்திரி மேகன் ஸ்கான்லன், இந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

குயின்ஸ்லாந்து,

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த எம்.பி. பிரிட்டானி லாவ்கா (வயது 37). சுகாதார துறைக்கான துணை மந்திரியாக பதவி வகிக்கும் லாகா, குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்நிலையில், இரவில் பொழுதுபோக்க தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெளியே சென்றபோது, அவரை சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதன்பின் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த துயர செய்தியை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

அந்த பதிவில், இந்த சம்பவம் யாருக்கு வேண்டுமென்றாலும் நடக்கலாம். எங்களில் பலருக்கு இதுபோன்ற சோகம் நடந்துள்ளது என தெரிவித்து உள்ளார். என்னுடைய உடலில் போதை பொருள் கலந்திருந்தது என்பது மருத்துவமனையில் நடந்த பரிசோதனை முடிவில் உறுதியானது. ஆனால், அவற்றை நான் எடுத்து கொள்ளவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன். என்னை தொடர்பு கொண்டு பேசிய பிற பெண்களுக்கும் கூட மயக்க மருந்து செலுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது சரியல்ல. நம்முடைய நகரில் மயக்க மருந்து கொடுப்பது அல்லது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது போன்ற ஆபத்து இல்லாமல், நாம் மகிழ்ச்சியாக சமூகம் சார்ந்த செயல்களில் ஈடுபட முடிய வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி லாகா, குயின்ஸ்லாந்து காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அந்நாட்டின் வீட்டு வசதி துறை மந்திரி மேகன் ஸ்கான்லன், இந்த குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியும், அச்சமும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

பெண்கள் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாவது என்பது ஏற்று கொள்ள முடியாதது. பெண்களை பாதுகாக்க கூடிய வகையிலான ஒவ்வொரு விசயமும் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கையை எங்களுடைய அரசு தொடர போகிறது. வன்முறை ஏற்படாமல் தடுக்க போகிறது என குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்