சீக்கியர்கள் மீது பழி கூற கோவில்கள் மீது தாக்குதல்: குருத்வாரா குழு பரபரப்பு குற்றச்சாட்டு
|கனடாவில் உள்ள சீக்கியர்கள் மீது பழி கூற இந்து கோவில்கள் மீது இந்திய புலனாய்வு அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது என குருத்வாரா குழு பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
பிராம்ப்டன்,
இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது வெளிநாடுகளில் தாக்குதல் நடத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், சமீப காலங்களாக இந்து மத ஸ்தலங்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
புது வருடம் தொடங்கியது முதல், ஆஸ்திரேலியா நாட்டில் மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து காணப்பட்டன. இதன்படி, மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதப்பட்டு இருந்தன.
கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசப்பட்டு இருந்தது. இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்தனர்.
பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதன்பின், கடந்த ஜனவரி 16-ந்தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரிய வந்தது. கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு இருந்தன.
இந்நிலையில், ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது கடந்த ஜனவரி 23-ந்தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தன.
ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3 முறை இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் நடப்பு பிப்ரவரி தொடக்கத்தில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதற்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கனடாவில் சமீப மாதங்களில் இந்து மத வழிபாட்டு தலங்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு ஒன்டாரியோ குருத்வாரா குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.
கனடாவில் உள்ள சீக்கியர்கள் மீது பழி கூற இந்து கோவில்கள் மீது இந்திய புலனாய்வு அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது என குருத்வாரா குழு பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், சீக்கிய சமூகத்தினர் மீது அவதூறு ஏற்படுத்தவும், கனடாவில் நல்லிணக்கம் அற்ற சூழலை விதைக்கும் வகையிலும், இந்துக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு என்ற குற்றச்சாட்டுகளை ஊக்கப்படுத்தவும், இந்திய புலனாய்வு அமைப்பு உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட இதுபோன்ற கோவில் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு, ஒன்டாரியோ குருத்வாரா கமிட்டி மற்றும் சீக்கிய சமூகத்தினர் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டு உள்ளது.
தொடர்ந்து அந்த அறிக்கையில், சமீப மாதங்களாக, ஒட்டாவா எம்.பி. சந்திரா ஆர்யா, பிராம்ப்டன் பகுதியில் நடந்த கோவில் சூறையாடலுக்கு எந்தவித சான்றும் இன்றி சீக்கிய சமூகம் மீது பொய்யான குற்றச்சாட்டை டுவிட்டரில் வெளியிட்டார்.
ஆனால், அதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என பீல் மண்டல போலீசார் கூறினர். இதேபோன்று, ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவத்தில் தங்களது சொந்த இடங்களின் மீது வன்முறை தாக்குதலை நடத்திய இந்திய வம்வசாவளியினர் 2 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களில் உள்ள ஒற்றுமையானது தெரிவிக்கும் விசயம் என்னவெனில், கனடாவில் சீக்கிய சமூகத்தினரை பழிகூற வேண்டும் என்ற வகையிலான நடைமுறை வெளிப்படுவது தெரிகிறது.
இந்து வழிபாட்டு தலங்களை சூறையாடும் எந்தவொரு செயலையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், ஒன்டாரியோவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்கள் மீதும் வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இந்த சம்பவங்கள் மீது முழுமையாக மற்றும் விரைவாக சட்ட அமலாக்க அமைப்புகள் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். சீக்கிய, இந்து சமூகத்தினர் இடையே கனடாவில் பூசல் போக்கு என்ற பொய்யை புறந்தள்ளி, அனைத்து சமூகத்தினரும் ஒன்றுகூட வேண்டும் என அழைக்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.