ரஷியாவில் தாக்குதல்; 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேர் கைது
|மாஸ்கோவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாஸ்கோ,
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ அருகே குரோகஸ் சிட்டி ஹால் என்ற இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
அப்போது அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது. தீ வேகமாக பரவியதால் இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 115 பேர் உயிரிழந்தனர். மேலும் 145 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கூரையின் இடிபாடுகளில் இருந்தும் பலர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் அரங்கில் இருந்து வெளியேறி வெள்ளை நிற சொகுசு காரில் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிரையான்ஸ்க் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேர் உள்பட தாக்குதலில் தொடர்புடைய 11 பேரை கைது செய்துள்ளதாக ரஷிய காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் சில தொடர்புகள் இருந்துள்ளதாகவும், அவர்கள் ரஷியாவின் எல்லையை கடந்து உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைப்பான எப்.எஸ்.பி. தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கும் உக்ரைனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.