காசாவில் தாக்குதல்; 3 இஸ்ரேல் வீரர்கள், 3 தொழிலாளர்கள் காயம்
|காசாவில் நடந்த தாக்குதலில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உள்பட 3 தொழிலாளர்கள் காயமடைந்து உள்ளனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. எல்லை வழியே உள்ளே புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
7 மாதங்களுக்கு கூடுதலாக நடந்து வரும் மோதலில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, காசா முனையின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், படையினரின் யஹலாம் பிரிவினர் மீது நடந்த தாக்குதலில், அவர்களில் 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இதேபோன்று, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்து உள்ளார். இதேபோன்று, வேறு 2 தொழிலாளர்களும் அந்த பகுதியில் பணியில் இருந்தபோது காயமடைந்தனர்.
இதுதவிர, வடக்கு காசா முனை பகுதியில் நடந்த மோதலில், கிவாதி இன்பேன்ட்ரி பிரிகேட் படை பிரிவின் ரோட்டம் பட்டாலியனை சேர்ந்த இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் நேற்றிரவு படுகாயமடைந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனை ஒன்றிற்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். எனினும், காயமடைந்த நபர்களை பற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை.