< Back
உலக செய்திகள்
பிரேசிலில் கன்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் பரிதாப சாவு
உலக செய்திகள்

பிரேசிலில் கன்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்தது: 9 தொழிலாளர்கள் பரிதாப சாவு

தினத்தந்தி
|
22 Sept 2022 5:51 AM IST

பிரேசிலில் கன்டெய்னர் கிடங்கு இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேசிலியா,

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாவ் பாலோ மாகாணத்தின் இடாபெசெரிகா டாசெர்ரா நகரில் வணிக நோக்கங்களுக்காக கன்டெய்னர்களை குத்தகைக்கு விடும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு ஒன்று உள்ளது.

நூற்றுக்கணக்கான கன்டெய்னர்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கிடக்கில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேசிலில் அடுத்த மாதம் 2-ந்தேதி நடைபெறும் பொதுத்தேர்தலில் சாவ் பாலோ மாகாணத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இருவர் நேற்று இந்த கிடங்குக்கு சென்று தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

இதையொட்டி தொழிலாளர்கள் அனைவரும் கிடங்கில் ஒரே பகுதியில் திரண்டிருந்தனர். வேட்பாளர்கள் பிரசாரத்தை முடித்து தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அதை தொடர்ந்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக கிடங்கில் தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கினர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சக தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதோடு இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.

எனினும் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னரும் 9 தொழிலாளர்களை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

டஜன் கணக்கான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்