< Back
உலக செய்திகள்
Somalia prison breakout attempt
உலக செய்திகள்

சோமாலியாவில் சிறை தகர்ப்பு முயற்சி முறியடிப்பு.. 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
15 July 2024 10:30 AM IST

அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கையெறி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி சிறையில் வன்முறையில் ஈடுபட்டனர்.

மொகதிசு,

சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள மத்திய சிறையில் உள்ள அல்-ஷபாப் பயங்கரவாதிகள் சிலர் நேற்று முன்தினம் சிறையை உடைத்து தப்ப முயன்றனர். கையெறி வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் சிறையில் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் சிறையில் பெரும் பதற்றமான சூழல் உருவானது. பயங்கரவாதிகளின் சதி குறித்து தெரியவந்ததும் ராணுவ வீரர்கள் உடனடியாக சிறைக்கு விரைந்தனர்.

அவர்கள் சிறையை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சிறைக்குள் சென்று வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதே வேளையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையேயான சண்டை நீண்டநேரம் தொடர்ந்தது. இறுதியில் வன்முறையை ஏற்படுத்தி சிறையில் இருந்து தப்ப முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இந்த மோதலில் 18 கைதிகளும், 3 ராணுவ வீரர்களும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதேபோன்று 2020-ல் சிறையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது கைதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள: https://x.com/dinathanthi

மேலும் செய்திகள்