கென்யாவில் அணை உடைந்து விபத்து: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்-40 பேர் பலியான சோகம்
|கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கனமழை பெய்து வருகிறது.
நைரோபி,
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்துள்ளதால் கிட்டதட்ட ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை பலியாகியுள்ளனர். பலர் இன்னும் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. கென்யாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கனமழை வெளுத்து வருகிறது. இதனால், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. இதனிடையே, எதிர்பாராத மழையை எதிர்கொள்ள முடியாமல், கென்யா அரசு உலகநாடுகளிடம் உதவி கோரியுள்ளது.