சூடானில் கனமழை, வெள்ளம்; 32 பேர் பலி
|சூடானில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 32 பேர் உயிரிழந்தனர்; 107 பேர் காயமடைந்தனர்.
கார்டூம்,
சூடான் நாட்டின் பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக அங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 7 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் 5,575 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அந்நாட்டு பொது சுகாதார அவசரநிலை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். 107 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் மாநிலத்தின் சில பகுதிகளில் மழை காரணமாக மக்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கஸ்ஸாலா மாநிலத்தில் 102 பேரும், கார்டூம் மாநிலத்தில் 4 பேரும் மற்றும் கெசிரா மாநிலத்தில் 16 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைதவிர, மற்ற மாநிலங்களில் சுகாதார நிலை சீராக உள்ளது என்றும் மழைக்கால தொற்றுநோய்களை எதிர்த்து போராட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அமைச்சகம் அக்கறை கொண்டுள்ளது என்று இயக்குனர் அல்-பாதில் முகமது மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பருவகால ஆற்றின் கரையோரங்களில் இருந்து மக்கள் விலகி இருக்கவும் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.