மத்திய அமெரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட 'ஜூலியா' புயல்; 28 பேர் பலி
|மத்திய அமெரிக்க நாடுகளை புரட்டிப்போட்ட ஜூலியா புயலை தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின.
மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமலா மற்றும் எல் சல்வடார் நாடுகளை 'ஜூலியா' என்கிற சக்தி வாய்ந்த புயல் புரட்டிப்போட்டுள்ளது. நேற்று முன்தினம் கவுதமலாவின் மத்திய நகரங்களை 'ஜூலியா' புயல் பந்தாடிய நிலையில் அங்கு சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதை தொடர்ந்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயல், மழை மற்றும் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த நாட்டின் அதிபர் அலெஜான்ட்ரோ கியாமட்டேய் அங்கு தேசிய பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.
இதனிடையே கவுதமாலாவை பந்தாடிய 'ஜூலியா' அண்டை நாடான எல் சல்வடாரை புரட்டிப்போட்டது. அங்கு புயலை தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இதனிடையே 'ஜூலியா' புயலுக்கு கவுதமலா நாட்டில் 18 பேர் பலியான நிலையில், எல் சல்வடாரில் 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் மாயமாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.