கால்வாய்க்குள் கவிழ்ந்த பஸ்; 21 பேர் பலி
|பஸ் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
கெய்ரோ,
எகிப்து நாட்டின் வடக்கு மாகாணம் நைல் டெல்டா. இந்த மாகாணத்தில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று நேற்று சென்றுகொண்டிருந்தது.
டஹாலியா மாகாணம் அஹா நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதில், கால்வாய் நீரில் பலர் அடித்து செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.