ஈகுவடார் சிறையில் கலவரம் 15 கைதிகள் பலி
|ஈகுவடார் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் பலியாகினர்.
குய்ட்டோ,
தென்அமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடிக்கிறது. குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டது சற்று நேரத்தில் இந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. கைதிகள் கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
அதை தொடர்ந்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கைதிகளை விரட்டியடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கலவரத்தில் கைதிகள் 15 பேர் பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.