மத்திய காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது குண்டு வீசிய இஸ்ரேல்: 12 பாலஸ்தீனர்கள் பலி
|வடக்கு காசாவின் ஷெஜையா சுற்றுப்புற பகுதிகள், தெற்கு காசாவின் ரபா, மத்திய காசா ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் செய்தி வெளியிட்டது.
காசா:
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஹமாஸ் அமைப்பினருடன் அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகின்றனர்.
அவ்வகையில், நேற்று மத்திய காசாவில் நேற்று இஸ்ரேல் படைகள் வான் தாக்குதல் நடத்தின. டேர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடம் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தாக்கியதில் அங்கு வசித்த 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், வடக்கு காசாவின் ஷெஜையா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தெற்கு காசாவின் ரபா, மத்திய காசா ஆகிய பகுதிகளில் ராணுவ நடவடிக்கை தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று செய்தி வெளியிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டை தொடங்கியதில் இருந்து இதுவரை காசாவில் 37,925 பேர் இறந்திருப்பதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் கூறி உள்ளனர்.