இந்த முறை பொதுமக்கள் 100 பேரை கடத்தினர்... நைஜீரியாவில் ஆயுதக்குழுவினர் அட்டூழியம்
|கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பெயர் பெற்ற கொள்ளைக் கும்பல்தான் இந்த கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், கதுனா மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மாணவர்களை ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்ற நிலையில், கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் 100 பேரை கடத்தி சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் ஜுரு கவுன்சில் பகுதியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர், டோகன் நோமா சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், 14 பேரை கடத்திச் சென்றுள்ளனர். நேற்று இரவு கஜுரு-ஸ்டேசன் சமுதாய மக்கள் மீது தாக்குதல் நடத்தி 87 பேரை கடத்திச் சென்றனர்.
வடமேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு பெயர் பெற்ற கொள்ளைக் கும்பல்தான் இந்த கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக் கும்பலில் உள்ள பெரும்பாலானவர்கள், இதற்கு முன்பு உள்ளூர் சமூகங்களுடன் மோதலில் ஈடுபட்ட மேய்ப்பர்கள் ஆவர்.
கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கான முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கடத்தப்பட்ட பள்ளிக் மாணவர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எந்த அப்டேட்டும் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்படவில்லை. மாணவர்கள் அனைவரும், அடர்ந்த காட்டுப்பகுதியில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.